தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு தாமே காரணம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா, எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார். கூட்டமைப்பின் தலைவர்களை புலிகள் இயக்கத்தின் தலைவரிடம் தாமே அழைத்துச் சென்றதாகவும் குறித்த தலைவர்கள் தங்களால் சுட்டுக்கொல்லத் தயாரானவர்களின் பட்டியலில் இருந்தவர்கள் எனவும் கருணா கூறினார்.

மேலும், தலைவர் சுட்டுக் கொல்லும் படி கூறியவர்களை அவ்வாறு செய்யாமல் விட்டது தான் தாம் செய்த தவறு எனவும் தெரிவித்தார். அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்பிலும் கருணா அம்மான் விமர்சனங்களை முன்வைத்தார். மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் கடந்த 1ம் திகதி, இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் கூறினார்.